இந்தியாவில் இனி பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவே முடியாது என்ற மாயை தகர்க்கப்பட்டு இருக்கிறது
Monday, 26 February 2024
Sunday, 25 February 2024
நான் என்ற அகந்தை...
நான்கு தெய்வ பக்தர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து சொர்க்கத்துக்கு போவது பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.
சொர்க்கத்துக்கு செல்வதற்கான தகுதி தங்களில் யாருக்கு உண்டு என்பது அவர்கள் வாதத்தின் அடிப்படையாக அமைந்திருந்தது.
சோமநாதன் என்ற பக்தன் சொன்னான்.
நான் வேதங்களையும் மந்திரங்களையும் முறையாக கற்றுத் தேர்ந்தவன்.
ஆகவே சொர்க்கத்திற்குப் போகும் தகுதி எனக்குத்தான் உண்டு.
வேதபாலன் என்ற பக்தன் அவன் கூற்றை மறுத்து பின் கண்டவாறு கூறலுற்றான்.
வேதங்களையும் மந்திரங்களையும் கற்று வைத்திருப்பது போர் கருவிகளை உபயோகிக்காமல் வைத்து துருப்பிடிக்க செய்வதற்கு சமம்.
நான் வேத மந்திரங்களை கற்றிருப்பதோடு அவற்றை என்னால் இயன்றவரை மக்களுக்கும் உபதேசிக்கிறேன். அதனால் சொர்க்கத்துக்குப் போகும் தகுதி எனக்குத்தான் உண்டு.
மூன்றாவது பக்தனான குகநாதன் சிரித்தான் .
கிளிப்பிள்ளை மாதிரி வேதங்களை கற்பதனாலும் பிறருக்கு ஒப்புவித்து விடுவதாலும் ஒரு மனிதனுக்கு தகுதிகள் எதுவும் அமைந்து விடாது.
வேதங்களும் மந்திரங்களும் சொல்லும் உட்பொருளை கிரகித்து அந்த முறைப்படி வாழ முற்படுபவனுக்கு தான் சொர்க்கத்துக்குப் போகும் தகுதி உண்டு.
அத்தகைய தகுதி என்னிடம் தான் அமைந்திருக்கிறது என்றான்.
நான்காவது பக்தனான சுந்தரானந்தன் சொன்னான்
நான் என் உடலை வாட்டி வதைத்து விரதங்கள் அனுஷ்டிக்கிறேன்.
இரவு பகல் பாராது பூஜை புனஸ்காரத்தில் ஈடுபட்டு இருக்கிறேன்.
நான் உங்கள் மாதிரியான வெளிப்பகட்டு வாய் வேதாந்தி அல்ல.
சொர்க்கத்துக்கு போவதற்கான நியாயமான தகுதி என்னிடம் தான் அமைந்திருக்கிறது.
இவர்கள் விவாதம் செய்வதை அருகில் மாட்டுச் சாணத்தைக் கொண்டு வறட்டி தட்டிக் கொண்டிருந்த ஒரு நரை மூதாட்டி கேட்டுக் கொண்டிருந்தாள்.
தன் கைவேலை முடித்துக் கொண்டு எழுந்த அந்த மூதாட்டி " நான் போனால் நிச்சயமாக சொர்க்கத்துக்கு போகலாம் " என்று கூறிக் கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.
அவள் போன வேகத்தை பார்த்தால் அவள் நேராக சொர்க்கத்துக்கே போய்விடுவாள் என்று தோன்றியது.
பக்தர்கள் நால்வரும் எழுந்து அவள் பின்னால் ஓடினார்கள்.
அவளை வழி மறித்து பாட்டி நாங்கள் எவ்வளவோ தகுதிகளை பெற்றிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
என்றாலும் சொர்க்கத்துக்கு போக முடியும் என்று உறுதி எங்களுக்கு ஏற்படவில்லை.
நான் சொர்க்கத்துக்கு போவேன் என்று உறுதியாக சொல்லுகிறாய். எங்களிடம் இல்லாத தகுதி உன்னிடம் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டனர்.
நான் சொர்க்கத்துக்கு போக முடியும் என்று சொல்லவில்லையே என்றாள் நரை மூதாட்டி.
பின்னே என்ன சொன்னாய் என்று பக்தர்களில் ஒருவன் கேட்டான்.
நான் போனால் சொர்க்கத்துக்கு போகலாம் என்று சொன்னேன் என்றாள் பாட்டி.
நீ சொல்வதற்கு வேறு ஏதாவது உள்ள அர்த்தம் இருக்கிறதா? என்று பக்தர்கள் வினாவினர்.
வெளிப்படையாக தானே பேசுகிறேன்.
நான் என்று சொன்னது என்னைப் பற்றி அல்ல.
நான் என்ற அகந்தையை பற்றி, அந்த நான் போய்விட்டால் அதாவது அது அகன்று விட்டால் சொர்க்கத்துக்கு நிச்சயம் போய்விடலாம் என்று சொன்னேன் என்றாள் நரை மூதாட்டி.
இவ்வாறு சொல்லிவிட்டு பாட்டி போய்விட்டாள்.
நான் என்ற அகந்தைக்கு ஆளாகி நின்ற நான்கு பக்தர்களும் வெட்கத்தால் தலை குனிந்தனர்.
Saturday, 24 February 2024
இல்லாதை நினைத்து....
.
'' *இல்லாதை நினைத்து* '
.......................................
சில சமயம் நாம் நமது செயல்களை அதன் விளைவுகளை எண்ணி தேவைக்கு அதிகமாகவே கவலைப்படுகின்றோம்..
நமக்கு கிடைத்து இருக்கும் இந்த வாழ்க்கையை நல்லவைகளுக்காக,இத்தனை ஆண்டுகள் இவ்வளவு நலத்தோடும், நீண்ட ஆயுளுடனும், வாழ்ந்ததற்காக மகிழ்ச்சி அடைந்தாலே இன்னமும் ஆனந்தமும், உடல் நலமும் பெற்று சிறப்பாக வாழ்வோம்..
இருப்பதை வைத்து திருப்தி அடைவதும், இல்லாதை நினைத்து வருத்தப் படாமல் வாழும் மனம் உள்ளவர்கள் எவரோ அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுள் பெற்று மகிழ்வுடன் வாழ்வார்கள்..
பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஜென்னி கால்மன்ட் என்ற பெண்மணி 122 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைத்தார்..
21.12.1875 முதல் 4.8.1997 வரை வாழ்ந்தார். தனது கடைசி 12 ஆண்டுகள் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே வாழ்ந்தார்..
இறுதி 5 ஆண்டுகள் அவருக்கு காது கேட்க வில்லை. பார்வையும் குறைந்து விட்டது..
ஆனாலும் , இறுதிவரை மகிழ்சியாகவே வாழ்ந்து வந்து இருக்கிறார்..இவரது மகளும்,மகனும், பேரனும்கூட இவருக்கு முன்னால் காலமாகி விட்டார்கள்.
இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததற்கு அவர் கூறியது,
’ நான் எப்போதும் எதற்காகவும், பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டேன்..மற்றும் என்னிடம் இல்லாதவற்றுக்கு கவலைப்படவும் மாட்டேன் என்று சொன்னாராம்..
மகிழ்ச்சியான தினத்தை தொடங்க, காலை எழுந்ததும் நம்மிடம் என்ன இருக்கின்றதோ அதை வைத்து திருப்தி கொள்ள வேண்டும்.
இவற்றை நாம் கடைப் பிடித்தால் நம்மை சுற்றி உள்ள அனைத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்...
Thursday, 22 February 2024
நான் என்னும் அகந்தை.
’ *நான் என்னும் அகந்தை..’’*
……………………………………....
நான் என்னும் அகந்தை மனிதனின் முதல் எதிரி.
தன்னம்பிக்கை என்பது வேறு; அகம்பாவம் என்பது வேறு...
என்னால்தான் எல்லாமே முடியும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில் முடியும்..
எந்த மனதில் 'அகந்தை' இருக்கிறதோ அங்கு குழப்பமும் இருக்கும்.
ஒரு மன்னன். ஒரு நாள் அவன் நாட்டில் உள்ள காட்டில் வாழ்ந்து கொண்டு இருந்த ஞானியைப் பார்த்து ஆசி பெற நினைத்துச் சென்றான்.
அவன் வருவதைப் பார்த்த ஞானி தன் குடிலுக்குள் சென்று விட்டார். மன்னன் திகைத்தான்.
”ஞானியே, நான் வந்திருக்கிறேன், வெளியே வந்து அருள் தாருங்கள்” அவர் வரவில்லை.
நான் இந்த நாட்டின் மன்னன் வந்து இருக்கிறேன், வெளியே வாருங்கள்” அவர் வரவில்லை.
மன்னன் பொறுமை இழந்தான்.“நான் இந்த நாட்டு மன்னன் வந்து இருக்கிறேன், உங்கள் அருளுக்காக”
உள்ளிருந்தே ஞானி சொன்னார்,
”நான் செத்த பின் வா!”மன்னன் குழம்பினான் .
அமைச்சரைக் கேள்விக் குறியுடன் பார்த்தான். அந்தக் காலத்தில் அமைச்சர்கள் எல்லாம் அறிவாளிகளாக இருந்தனர்!
அவர் சொன்னார்”
அவர் சொல்வது உங்களுக்குள் இருக்கும் ‘’நான்’’ என்ற ஆணவத்தை; அதை துறந்து வரச் சொல்கிறார் ”என்று .
நாடாண்டவர்களுக்கு மட்டுமல்ல நாடாளத் துடிப்பவர்களுக்கும் இது தேவையான அறிவுரை!
"நான்" என்னும் அகங்காரம் உள்ளவரை எவராலும் வாழ்வில் வெற்றி அடைய முடியாது..
"EGO" (நான் என்னும் அகங்காரம்) என்பது, கண்ணில் விழுந்த தூசு போன்றது.
அந்த தூசியை சுத்தம் செய்யாமல் உங்களால் எதையும் காண இயலாது.
எனவே "EGO" (நான் என்னும் அகங்காரம்) என்கிற தூசியை சுத்தம் செய்து விட்டு உலகத்தை பாருங்கள்.
Wednesday, 21 February 2024
குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''.....
*குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை''..*
.......................................
குழந்தைகள் களிமண்ணை போன்றவர்கள், அவர்களுக்கு சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
குழந்தைகளை பெற்று போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை;
பெற்ற குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழ கற்று தந்து வழி நடத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமை ஆகும்.
ஹேல்க் எல்லீஸ் என்ற அறிஞருக்கு நடந்த நிகழ்வு..ஒரு சமயம் பள்ளி முடித்துவிட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு முரட்டு மாணவன் அவரை பலமாக அடித்து விட்டான்..
உடலில் சிறிய காயத்துடன் வீடு திரும்பிய ஹேல்க் எல்லீஸ்ஸை பார்த்த அவரது தாயார் மிகவும் துடி துடித்து விட்டார்..
மிகுந்த வேதனையுடன் தன் மகனைப்பார்த்து,
'' யார் உன்னை இப்படி காயம் ஏற்படும்படி அடித்தது? என்று கேட்டார்..
அதற்கு ஹேல்க் எல்லீஸ் என்னை என் சக மாணவன் அடித்து விட்டான் என்றார்.. அதற்கு அவரின் அம்மா, "நீயும் அவனை திருப்பி அடித்தாயா? என்று கேட்டார்..
ஹேல்க் எல்லீஸ் அமைதியாக,'' இல்லையம்மா, நானும் திருப்பி அடித்தால் நானும் அவனைப்போல் முரடனாகத்தானே வருவேன் என்றார்..
அவரது அன்புத்தாய் அவனை அப்படியே கட்டி அனைத்துக் கொண்டார்..
உங்கள் பிள்ளைகளுக்கு உண்மை, நேர்மை, துணிவு, விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுங்கள்..
குழந்தைகளுக்கு சிறந்த பண்பு நலன்களை கற்றுத்தரும் கடமையானது, பெற்றோர்களுக்கு மட்டுமே உரியது அல்ல.
அதில், ஆசிரியர்களுக்கும் மிகுந்த பங்குண்டு என்பதை மறத்தலாகாது.
ஆசிரியர்களை, பல குழந்தைகள் தங்களின் முன்மாதிரி ஆளுமைகளாக எடுத்துக்கொள்கின்றன.
சிட்டுக் குருவியின் வினோதமான பொழுதுபோக்கு விண்ணையே தொட முடிகிறது....
ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு...
ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல, தனக்குப் பின்னால் ஒரு பை-யை கட்டிக் கொண்டு, வினோதமான உணர்வுகளை மனித இனத்திலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது.
மனிதர்களுக்கு இடையே ஒரு இடத்தில் சண்டை நடப்பதைப் பார்த்தால் அங்குள்ள கோபத்தை அது சேகரிக்கும்.
இன்னொரு இடத்தில் இருக்கும் ஏமாற்றத்தை அது சேகரித்துக் கொள்ளும்.
பொறாமையில் ஒருவன் தீயாக எரிந்ததைப் பார்த்தால் சிட்டுக்குருவிக்கு சந்தோசம் வந்து விடும்.
தன் பையில் பொறாமையை சேகரித்துக் கொள்ளும்.
இப்படி பார்க்கும் இடமெல்லாம் அபூர்வமான வினோதமான உணர்வுகளைச் சேகரிக்க ஆரம்பித்தது.
வினோதமான உணர்வுகளுக்கோ அளவே இல்லை. தனது சேகரிப்பினை எண்ணி மகிழ்ந்து போனது அது!.
ஒரு நாள் அதற்கு பறப்பதற்கு சற்று கஷ்டமாக இருந்தது.
இது வரை லகுவாக ஜம்மென்று வானில் சீறிப் பாய்ந்த அதனால், இன்று வேகமாகப் பறக்க முடியவில்லை.
சோர்ந்து போன அது, ஒரு மரத்தில் வந்து உட்கார்ந்தது.
அதைப் பார்த்த அதனுடைய நண்பனான நாய், "என்ன குருவி! வழக்கத்திற்கு மாறாக இப்படிச் சோர்ந்து உட்கார்ந்திருக்கிறாயே! உடம்புக்கு என்ன?" என்றது.
"நண்பனே! என்னால் பறக்க முடியவில்லை!
வேகமாகச் செயல்பட முடியவில்லை.
எனது ஆற்றல் போய் விட்டதைப் போல உணர்கிறேன். காரணமும் புரியவில்லை" என்றது.
நண்பனான நாய், "அது சரி, உன் பின்னால் ஒரு பை வைத்திருக்கிறாயே, அதில் என்ன இருக்கிறது?" என்று கேட்டது.
"அதுவா, என்னுடைய சேகரிப்புகளான உணர்வுகளை வைத்திருக்கிறேன்!" என்றது குருவி.
"அட, அப்படியா? என்ன என்ன உணர்வுகள்? எனக்குச் சொல்லேன்" என்றது நாய்.
"எங்கு பார்த்தாலும் ஏமாற்றம், பொறாமை, சோகம், கோபம், பேராசை. இவையெல்லாம் வேறு வேறு ரூபத்தில் விதவிதமாக எனக்குக் கிடைத்தன. அனைத்தையும் சேகரித்திருக்கிறேன்." என்றது குருவி.
"அப்படியா! இந்த பை தான் உன்னைப் பறக்க விடாமல் செய்கிறது என நான் எண்ணுகிறேன். இதைக் கவிழ்த்துக் கொட்டிப் பாரேன்" என்றது நாய்.
"சே! புரியாமல் பேசுகிறாயே!
இது மிகவும் சிறிய பை! இதில் கனமே இல்லை" என்றது குருவி.
நாய் விடவில்லை. "நான் சொல்வதைச் செய்து பாரேன்" என்றது அது.
ஒத்துக் கொண்ட குருவி, தன் பையிலிருந்து ஒரு கோப உணர்வை எடுத்துக் கீழே போட்டது. அடுத்த கணம் வானில் ஜிவ்வென்று பறந்தது....
அதிசயித்துப் போன அது இன்னொரு உணர்வான பொறாமையை எடுத்துக் கீழே போட்டது.
என்ன அதிசயம்! இன்னும் ஆற்றல் கூடி அதிக உயரத்தில் பறக்க ஆரம்பித்தது...
ஒவ்வொன்றாக அது கீழே போடப் போட முன்பிருந்ததை விட லேசாக மாறி அதிக உயரத்தில் அதிக ஆற்றலுடன் அது பறக்க ஆரம்பித்து விண்ணையே தொட்டு விட்டது.
சிறிது காலம் சென்ற பின்னர் அது நாயைச் சந்தித்தது
"நண்பனே!எதிர்மறை உணர்வுகளை சேகரிக்கவே கூடாது.
அவை மிகச் சிறியவை போலத் தோற்றமளித்தாலும் அதன் பாரம் மிகவும் பெரிது.
அது மட்டுமல்ல, அவை என்னுடைய சக்தியை உறிஞ்சி விட்டன!
ஒவ்வொன்றாக அவற்றைக் கழட்டி விட கழட்டி விட எனது ஆற்றலும் வேகமும் முன்பை விடப் பல நூறு மடங்கு பெருகி விட்டது.
விண்ணையே என்னால்
இப்போது தொட முடிகிறது.
மனிதர்களும் இது போன்ற ஏமாற்றம், சோகம், கோபம், பொறாமை, பேராசை என்ற உணர்வுகளைச் சுமக்காமல் அவ்வப்பொழுது இவற்றைக் கழட்டி விட்டால், அவர்களும் விண்ணைத் தொடும் சாதனைகள் பல புரியலாம்.
நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது.
குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார்.
"என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது.
என் பணியாட்கள் கூட எனக்கு உண்மையாக இல்லை.
என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை" என்றார்.
புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்...
"ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள்.
தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள்.
அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும்
கை தட்டின.
உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.
அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை சரியில்லாத ஒருவன் வந்தான்.
தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான்.
அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின.
உலகிலேயே மோசமான இடம் இதுதான்! எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான்.
இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை.
நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது.
உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு.
உலகம் உனக்கு சொர்க்கமாகும்" என்றார் குரு.
Subscribe to:
Comments (Atom)