Friday, 23 December 2022

முட்டாள் என்று முத்திரை குத்தப்படுபவரை இன்னொரு கோணத்தில் பார்த்தால்.....

* ஒரு குட்டிக்கதை.* 

ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களுக்கு கதை ஒன்றை சொல்லத் தொடங்கினார்.

ஏராளமான பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலில் சுற்றுலா சென்ற பயணிகள் கப்பல் ஒன்று விபத்தை சந்தித்தது. கொஞ்சம் கொஞ்சமாக கப்பல் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தது. மக்கள் அங்குமிங்கும் ஓடித் தங்களை காப்பாற்றிக் கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டிருந்தனர்.

கப்பலில் இருந்த மக்கள் அங்கிருந்த  உயிர்காப்புப் படகில் ஏறி தப்பிச் செல்ல முயன்றனர். அந்த படகில் மொத்தம் 100 பேர் தான் பயணம் செய்ய முடியும். ஆனால் அதில் 110 நபர்கள் ஏறி விட்டனர். கப்பல் மூழ்கிக் கொண்டிருந்தது. இப்போது கப்பலில் கடைசியாக ஒரு கணவன் அவர்  மனைவி தவிர அனைவரும் படகில் ஏறி விட்டனர்.

அந்த இருவரும் படகில் ஏறினால் படகு மூழ்கி விடும். இருவரில் ஒருவர் வேண்டுமானால் ஏறலாம் என்ற நிலை. முன்னால் நின்ற மனைவி பின்னால் நின்ற கணவனைத் திரும்பிப் பார்த்தாள். கணவன் எதையும் யோசிக்காமல் மனைவியை பின்னுக்கு தள்ளி விட்டு படகில் ஏறிக் கொண்டார்.

மூழ்கிக் கொண்டிருந்த கப்பல் மனைவியோடு சேர்ந்து மூழ்கியது. அப்போது மனைவி சத்தமாக ஏதோ சொன்னாள். கடலின் இரைச்சல் மற்றும் கப்பலில் இருந்த ஆட்களின் சத்தத்தால் மனைவி சத்தமாக கத்திச் சொன்ன வார்த்தைகள் கணவனுக்கு கேட்கவில்லை. அவள் சொன்ன வார்த்தைகள் யார் காதிலும் விழவில்லை. மனைவி நீரில் மூழ்கிப் போனாள்.

ஆசிரியர் கதையை நிறுத்தி கடலில் மூழ்கிக் கொண்டிருந்த போது மனைவி என்ன சொல்லியிருப்பாள் என்று கேட்டார்.
 
மாணவர்களில் பெரும்பாலோர், "நான் உன்னை வெறுக்கிறேன்!" அல்லது "நீ என்னை ஏமாற்றி விட்டாய்!" என்று கூறியதாய் கூறினர்.

ஒரு மாணவன் மட்டும் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். ஆசிரியர் அவனிடம் போய் அவனது பதிலைக் கேட்டார்.

அவன் அமைதியாக “ நம் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் “ என்று கூறியிருப்பார் என்றான்.

ஆசிரியருக்கு ஒரே ஆச்சரியம்.

“இந்த கதையை இதற்கு முன் கேட்டிருக்கிறாயா?” என்று கேட்டார்.

“இல்லை. இப்போது தான் முதன் முறையாக கேட்கிறேன். ஆனால் எனது அம்மா நோயினால் பாதிக்கப்பட்டு இறப்பதற்கு முன் இதைத் தான் என் தந்தையிடம் கூறினார்” என்றான்.

ஆசிரியர் கதையை தொடர்ந்தார்.

கப்பல் மூழ்கியது. கடலில் மூழ்கிய மனைவியின் கணவர் வீட்டுக்கு பத்திரமாக வந்து சேர்ந்தார். தன் மகனையும் மகளையும்  நல்லபடியாக வளர்த்து அவர்களை நல்ல நிலைக்கு வர வழிவகை செய்து கொடுத்தார்.

பல வருடம் கழித்து அந்த கணவர் இறந்து விட்டார். அவர் இறந்த பின் அவர் அறையில் இருந்த தந்தையின் டைரியை மகள் படிக்க நேர்ந்தது.
 
 அந்த மனிதன் இறந்த பிறகு, அவளுடைய மகள் தனது உடமைகளைத் திருப்திபடுத்தும் போது தந்தையின்  நாட்குறிப்பை கண்டு பிடித்தார்.
 
அதில் கப்பலில் மனைவி மூழ்கிய சம்பவம் பற்றியும் எழுதப்பட்டிருந்தது.

கப்பலில் சுற்றுலா செல்வதற்கு ஒரு மாதம்  முன்பு தான் அவர் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. புற்றுநோயின் கடைசிக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் குணப்படுத்துவதற்கு வழியில்லாமல் இருந்தது. தன்னுடைய கடைசி நாட்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மனைவியை மகிழ்விக்கவே கப்பலில் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றார்.

அன்று மனைவியை தப்ப வைத்து அவர் கடலில் மூழ்கியிருந்தாலும் தங்களுடைய குழந்தைகளை காப்பாற்றுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.

”நானும் அவளுடன் கடலின் அடியாளத்தில் மூழ்கிப் போகவே விரும்பினேன். ஆனால் குழந்தைகளைக் காப்பாற்ற நான் உயிரோடு இருந்தாக வேண்டும் என்ற சூழ்நிலை என்னைப் படகில் குதிக்க வைத்தது”

இந்த வரிகளைப் படிக்கும் போது மகளின் விழியோரம் கசிந்த நீரை அவளின் பெற்றோர் இருவரும் வானுலகில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தனர்.
  
கப்பலில் இருந்து படகில் குதிக்கும் போது கொடூரமான வில்லனாகத் தெரிந்த கணவர் கடைசியில் அவர் எழுதியிருந்த டைரியைப் படிக்கும் போது அழகான பாசமான அப்பாவாகத் தெரிகிறார்.

உலகத்தில் நல்லது தீயது என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது அர்த்தங்கள் மாறுபடுகின்றன. 

விழித்திருப்பவனுக்கு இரவு நீண்டது. விழி திறந்து  உலகைப் பார்ப்பவனுக்கு ஒரு நிகழ்வில் இருக்கும் பல கோணங்களைப் புரிந்து கொள்ளுமளவுக்கு காலம் நீண்டிருக்கும்.

நாம் காணும் ஒவ்வொரு நிகழ்வும் குளத்தில் எறிந்த கற்களைப் போன்றவைகள். அவை கண்ணில் படுவதில்லை. ஆனால் கரைந்து போகாமல் நீருக்குள் அமிழ்ந்து கிடக்கும். மூழ்கித் தேடினால் கிடைக்கும். ஆழ்ந்து சிந்தித்தால் உண்மை புரியும்.

முட்டாள் என்று முத்திரை குத்தப்படுபவரை இன்னொரு கோணத்தில் பார்த்தால் அவருக்குள் இருக்கும் புத்திசாலித்தனம் தெரியும்.

Friday, 16 December 2022

ரூபாயை எடுத்துக் கொடுத்து.. யாருக்குகேனும்உணவு பகிருங்கள்" கற்பகம் ஹோட்டலின் ஓனர் கருப்பசாமி

ஒரு சிறிய உணவு விடுதி.
கரூர்  ஜவகர் பஜாரிலுள்ள ஒரு முட்டு
சந்தில்..ஹோட்டல் கற்பகம் இருக்கிறது. அந்த ஹோட்டல் பத்து பேர் மட்டும் அமர்ந்து சாப்பிடலாம்.

கற்பகம் ஹோட்டலின் ஓனர் கருப்பசாமி தானே கல்லாவை கவனிப்பார். உணவு பரிமாறுவதில்
இருந்து அனைத்து வேலைகளும் அவரே. சமையல் வேலைக்கு மட்டும் மாஸ்டர் வைத்து கொள்வார்.

கற்பகம் உணவு விடுதி..முட்டு சந்தில்
இருந்தாலும், நாள் முழுவதும் சற்று,
சுறு, சுறுப்புடன் இயங்கி கொண்டு இருக்கும்.

உணவின் சுவை கூடுதலாக மெச்சும்
படி இருப்பதால், மற்ற உணவு விடுதிகளை காட்டிலும், விலைகுறைவாகவும், தரமாகவும், 
சற்று தாராள அளவு உடையது ஆகவும், இங்கு உணவு பொருட்கள்
இருக்கும்.

கற்பக உணவு விடுதி ஓனரின் கல்லா
டேபிளில் ஒரு சிலேடு தொங்கி கொண்டு இருக்கும். அந்த சிலேட்டில்
காலை நேரம் என்றால்..நான்கு இட்லி
ஒரு டீ  ..என்றும் எழுதப்பட்டு இருக்கும்.

அதை பார்த்து யாரோ ஒருவர் உணவு
விடுதிக்கு சென்று இட்லி சாப்பிட்டு,
டீ குடித்து விட்டு.. சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல்" சிலேட்டை"
காட்டி சென்று விடுவார்.

பின், சிறிது நேரம் கழித்து, கருப்பசாமி மீண்டும்..அந்த சிலேட்டில் 
ஏதோ எழுதி தொங்க விடுவார்.

இப்பொழுது, யாரோ,ஒருவர் முன்னம் 
குறிப்பிட்டதுப் போல் சாப்பிட்டு விட்டு,
"சிலேட்டை" காட்டி காசு கொடுக்காமல் சென்று விடுவார்.
யாரும் அவரை ஏன்? என்று கேட்க
மாட்டார்கள்.

இப்படியாக ஒரு நாளைக்கு பதினைந்து, இருபது நபர் வரை சாப்பிட்டு சென்று விடுவார்கள். இது
வாடிக்கையாக கற்பக உணவு விடுதியில் நடக்கும் செயல்.

புதிதாக கற்பக உணவு விடுதியில்,
சாப்பிட வந்த ஒருவர், தான் சாப்பிட்டதற்கு கல்லாவில் பணம் கொடுக்க சற்று காத்திருந்தார்.

அப்பொழுது.. கருப்பசாமி, பரிமாறி விட்டு கல்லாவுக்கு வந்தார்.
காத்திருந்தவரிடம் பணத்தை பெறும்
முன், அவர் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டவர்.. பணம் கொடுக்காமல்
போகிறார்" என்றார் சற்று பதட்டத்துடன்....

கருப்பசாமி தன் முறுக்கு மீசையை
வருடிக் கொண்டு.." அய்யா.. உங்களை போல் சாப்பிட வருகிறவர்கள் தான் சாப்பிட்டதற்கு
பணம் கொடுத்து விட்டு, இதுப் போன்று உணவுக்கு வழி இல்லாதவர்களுக்கும் சேர்த்து பணம்
கொடுப்பார்கள்.அப்படி, அவர்கள்
கொடுக்கின்ற பணத்திற்கு ஏற்ப, 
"சிலேட்டில் " உணவு வகைகளை எழுதி வைப்பேன். அதை பார்த்து விட்டு..சாப்பிட்டு விட்டு" சிலேட்டை"
கை நீட்டி போவார்கள். இது, இங்கு
வாடிக்கையான நடை முறைதான்"
என்றார்.

மேலும் தொடர்ந்தார்...
" அப்படி பணம் யாரும் கொடுக்கவில்லை என்றால், என் பங்குக்கு நானாக எழுதி போடுவேன்.
யாரேனும், சாப்பிட்டு விட்டு போவார்கள்.நான் சின்ன வயதில்,
ஒரு வேளை சாப்பாட்டுக்கு என்ன..
பாடு பட்டிருப்பேன்" என்று தன் ஈரக்
கண்களை அகல விரித்து அவரிடம்
சொன்னார்.

அப்படி, கருப்பசாமி சொன்னவுடன்...
புதிதாக வந்த வாடிக்கையாளர்...
அவசரமாக, தன் சட்டை பைக்குள்
கை விட்டு.. இரு நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து.. யாருக்குகேனும்
உணவு  பகிருங்கள்" என்று சொல்லி
நகர்ந்தார்.

அந்த முட்டு சந்துக்குள் சர்வ இயல்பாக, சில பைத்தியங்களின்
நடமாட்டம், அவ்வப்பொழுது இருந்து
கொண்டே இருக்கும்.

அவர்களுக்கு மட்டும், உணவு பொட்டலங்கள் கருப்பசாமியிடம் இருந்து கை மாறி விடும். அவர்களுக்கு பிச்சை எடுக்க தெரியாது.. கேட்டு வாங்க தெரியாது..
பசி என்ற உணர்வும் தெரியாது.. ஆனால், கையில் கிடைத்ததை சாப்பிட வேண்டும் என்று மட்டும் தெரியும்.

கருப்பசாமி இப்பொழுது  சிலேட்டில்...
" உறவுகள் மேம்பட சற்று.. உணவிடுங்கள் " என்று எழுதிவிட்டு...
மூவருக்கு மதியம் "சாப்பாடு தயார்"
என்று எழுதி..புன்னகையுடன் கல்லா
டேபிளில் தொங்க விட்டார்........

Saturday, 10 December 2022

கதையின் நீதி 1

ஒருவருக்குத் திடீர் சந்தேகம் வந்தது தன்னுடைய மனைவிக்கு காது கேட்கவில்லையோ ?
ஆனால் இதை மனைவியிடம் நேரடியாகக் கேட்க அவருக்குத் தயக்கம். தயக்கம் என்ன, பயம் தான்.

இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் சொன்னார். அதற்கு அவர் ஒரு எளிய யோசனை சொன்னார் .

இருபது அடி தூரத்தில் இருந்து மனைவியிடம் ஏதாவது பேசிப் பாருங்கள் , மனைவியின் காதில் விழவில்லை எனில் சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள்,
பின் பத்து , ஐந்து இப்படி குறைத்துக் கொண்டே நெருங்கிச் சென்றுப் பேசுங்கள்.

எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் மனைவிக்கு காதுக் கேட்கவில்லை எனத் தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம் என டாக்டர் சொன்னார். அதைக் கேட்டவுடன் அந்தக் கணவனுக்கு ஒரே குஷி.

உற்சாகமாக வீடு திரும்பிய அவர் வீட்டு வாசலில் இருந்தபடியே உள்ளிருந்த மனைவியிடம் இன்று என்ன சமையல்? எனக் கேட்டார்.
பதில் எதுவும் இல்லை. பின் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியைக் கேட்டார். அதற்கும் பதில் இல்லை , ஹாலில் இருந்து கேட்டார் , சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார். மனைவியிடமிருந்து பதிலே இல்லை.
போச்சு இரண்டு ஸ்பீக்கரும் அவுட் ஆகிவிட்டது போல என்று மனதில் கன்ஃபார்ம் செய்து விட்டார்.
கடைசி வாய்ப்பாக மனைவியின் காது அருகே சென்றுச் சத்தமாக இன்றைக்கு என்ன சமையல் ?“ எனக் கேட்டார்.

காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே அவர் மனைவி அவரைக் கோபமாக திரும்பிப் பார்த்து, ”ஏன் இப்படி கத்துறீங்க , நீங்களும் வாசல் கேட்டிலிருந்து , வரவேற்பறையில் இருந்து , ஹாலில் இருந்து , சமைலறை வாசலில் இருந்து கேட்க , கேட்க நானும் முருங்கைக்காய் சாம்பார் , உருளைக்கிழங்கு பொரியல்னு சொல்லிக்கிட்டே இருந்தேனே , அது உங்கள் காதில் விழவில்லையா ?
காதுல என்ன பஞ்சு மூட்டையா வைச்சிருக்கீங்க எனப் பொரிந்துத் தள்ளிவிட்டாள்...
இப்போது தெரிகிறதா…

பிரச்சினை யார் காதில் என்பது ?

கதையின் நீதி :-

இப்படித் தான் பலர் பிரச்சனையை நம்மிடம் வைத்துக் கொண்டு அது பிறரிடம் இருப்பதாக நாம் நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்

🙏🏼💐🙏🏼💐🙏🏼