Monday, 18 March 2024

கோபம் தன்னையே அழிக்கும்

கோபம்  தன்னையே அழிக்கும்

குட்டி கதை
அது ஒரு கிராமம். அது காட்டை ஒட்டிய வனப்பகுதி. பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்கு போனான். அழகிய புள்ளிமான் ஒன்றை பிடித்து வந்தான்.
மானின் அழகில் மயங்கிய அவன் மாமிசத்திற்காக கொல்லவில்லை. வீட்டில் வளர்த்து வந்தான். ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. ஆனால் அது ஓடவில்லை. காணாமல் போய்விட்டது.
அவனுக்கோ ஆத்திரம். இந்த மானை யார் பிடித்து போயிருப்பார்கள். அவன் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கோவமாக உருவெடுத்தது.
உடனே கடவுளை துதித்தான். கடவுளே எனக்கு தரிசனம் தா...! என்று
கடவுளும் வந்தார்...!
பக்தா என்னை அழைத்ததின் காரணம் என்ன? கடவுள் கேட்டார்.
அறிவாளி பக்தன் என்ன கேட்கணும். நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு வேண்டும் என்று தானே கேட்டிருக்க வேண்டும்.
ஆனால் கேட்கவில்லை. கோவம் கண்ணை மறைத்தது.
தெய்வமே… நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன். அந்த மானை காணவில்லை. அந்த மானை திருடியவன் யாராக இருப்பினும், அவன் முன்னே வரவேண்டும். அவனை என் கோவம் தீர அடிக்க வேண்டும்.
இதுதான் பக்தன் கேட்ட வரம்.
வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் கடவுள் பக்தனின் கோரிக்கைக்கு தயங்கினார்.
பக்தா.. உன் மானை திருப்பி தருகிறேன். அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே.
இல்லை.. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் அவனை பழிவாங்காமல் விடமாட்டேன், என்று பிடிவாதமாக கேட்டான்.
சரி.. நீ கேட்கும் வரத்தை தருகிறேன். பின்னால் என் மீது வருத்தப் படக்கூடாது.
வருத்தம் வராது.
சரி.. தந்தேன் வரம். உன் மானை திருடி சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்து கொள். வரத்தை தந்த கடவுள் மறைந்து விட்டார்.
பக்தன் திரும்பி பார்த்தான்.அங்கே நின்றது சிங்கம்.
பழிவாங்கும் கோவம் மறைந்தது. பயம் பிடித்து கொண்டது. கை கால் எல்லாம் நடுங்க தொடங்கியது. கண் மண் தெரியாமல் ஓட தொடங்கினான். கடவுளே என்னை காப்பாத்து.
கடவுள் சிரித்தார் … ஆத்திரகரனுக்கு புத்தி மட்டுதானே. அவன் கதை முடிந்தது. இங்கே அவன் அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் கடைசியில் அழிவை தந்தது. 
கோபம் என்பது மணிதனின் இனிய பண்புகளை சுட்டு எறிக்கும் தீ.

Friday, 15 March 2024

கற்பனையான பிரச்னைகளுக்கு அநாவசியமாக டென்ஷன் ஆகாதீர்கள்.

ஒரு பள்ளிக்கூடம்.

ஆசிரியர் வகுப்பில் நுழைகிறார்.

மாணவர்கள் எழுந்து நிற்கிறார் கள். அவர்களை அமரச் சொல்லிக் கையமர்த்திவிட்டு, கரும்பலகையில் எழுத ஆரம்பிக்கிறார்.

3 & 6 & 12

இப்படி மூன்று எண்களை எழுதிவிட்டு மாணவர்கள் பக்கம் திரும்புகிறார். கேட் கிறார்.

‘‘மாணவர்களே... இதன் தீர்வு...’’

அவசரக்குடுக்கையான ஒரு மாணவன் எழுந்து நிற்கிறான்.

‘‘ஐயா..! இது ஏறுமுகம்... ஆகவே அடுத்த எண் 24... இதுதான் விடை!’’

‘‘இல்லை!’’ என்கிறார் ஆசிரியர்.

அடுத்து ஒரு மாணவி எழுந்து நிற்கிறாள்.

‘‘ஐயா! அந்த மூன்று எண்களையும் கூட்டினால் 21. அதுதான் விடை!’’

‘‘இல்லை... இல்லை!’’ 
மாணவர்கள் விழிக்கிறார்கள்.

இப்போது ஆசிரியர் விளக்குகிறார்.

‘‘மாணவர்களே... நான் எந்தக் கணக்கையும் இன்னும் போடவில்லை. அதற்குள் விடை காண அவசரப்படுகிறீர்கள். இயல்பாக எனக்குத் தோன்றிய மூன்று எண்களைத்தான் கரும்பலகையில் எழுதினேன். மற்றபடி நான் இப்போது எழுதியதற்குத் தீர்வு என்று எதுவும் இல்லை.’’

தெளிவான மாணவர்கள் தலையசைத்து ஒப்புக்கொண்டார்கள்.

ஆசிரியர் மறுபடி ஆரம்பித்தார்.

‘‘இப்போது மறுபடியும் முயல்வோம்...’’ என்று சொல்லிவிட்டு, கரும்பலகையில் எழுதினார்:

22 58 33 55.

உடனே மாணவர்கள் சந்தேகத்துடன் கேட்டார்கள்.

‘‘சார், இதன் தீர்வு என்ன?’’

ஆசிரியர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

‘‘இதற்கான தீர்வை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், இது என் வீட்டு டெலிபோன் நம்பர்!’’

மாணவர்கள் அமைதியானார்கள்.

ஆசிரியர் பேச ஆரம்பித்தார்.
‘‘மாணவர்களே! இந்த இரண்டு கணக்குகள் மூலமாகவும் உங்களுக்கு இரண்டு பாடங்கள் போதிக்க விரும்புகிறேன். உங்களுக்கு என்னுடைய முதல் அறிவுரை:

கற்பனையான பிரச்னைகளுக்கு அநாவசியமாக டென்ஷன் ஆகாதீர்கள்.

இரண்டாவது அறிவுரை:

ரிலாக்ஸாக இருங்கள்.

நண்பர்களே! 

இந்த அறிவுரை மாணவர்களுக்காக மட்டும் அல்ல. எல்லா மனிதர்களுக்காகவும்தான்.

இன்றைய மனிதன் கற்பனையான பிரச்னை களிலேயே அதிகம் கலங்கிப் போகிறான். அவசரப் பட்டு ஒரு முடிவுக்கு வந்த பிறகு அல்லல் படுகிறான்.

விளைவு?

ஆலயங்களை நாடிச் சென்று ஆண்டவனிடம் முறையிடுகிறான்.

பக்தர்களே!

உங்களுக்கு பகவான் சொல்ல விரும்புகிற அறிவுரையும் இதுதான்:

1. கற்பனையான பிரச்னைகளுக்கு அநாவசியமாக டென்ஷன் ஆகாதீர்கள்.

2. ரிலாக்ஸாக இருங்கள்.

தென்கச்சி கோ.சுவாமிநாதன் சொன்ன கதை.

Sunday, 3 March 2024

விருந்துக்கு வந்த சாமியார்

விருந்துக்கு வந்த சாமியார்

ஒரு ஊரில் ஒரு குடியானவன் இருந்தான்.

அவன் தினமும் ஒரு சாமியாரை வீட்டுக்கு அழைத்து வந்து சாப்பாடு போடுவான். அதற்குப் பின்னர்தான் அவன் சாப்பிடுவான்.

அது அவன் மனைவிக்குப் பிடிக்கவில்லை. அதைத் தடுத்து நிறுத்த நினைத்தாள்.

ஒரு நாள் ஒரு சாமியாரை அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு சாப்பிட இலை வாங்கப் போனான்.

சாமியார் விருந்தை எதிர்பார்த்து ஆசையோடு உட்கார்ந்திருந்தார்.

குடியானவன் மனைவி வீட்டில் இருந்த நெல்லு குத்துகிற உலக்கையைக் கழுவி, விபூதி பூசி, மாலை போட்டு சாமியாரு பார்வையில் படுகிற மாதிரி வைத்தாள்.

சாமியாருக்குப் புரியவில்லை. ‘உலக்கைக்கு ஏன் மாலை போட்டு வைத்திருக்கிறாய்’ என்று கேட்டார்.

‘எங்கள் வீட்டுக்காரர் உங்களிடம் ஒன்றும் சொல்லவில்லையா’ என்று அவள் கேட்டாள்.

சாமியார் ‘இல்லை’ என்று சொன்னார்.

அவள் உடனே முகத்தைச் சோகமா வைத்துக் கொண்டு, ‘எங்க வீட்டுக்காரர் தினம் ஒரு சாமியாரை அழைத்துக் கொண்டு வந்து வயிறார சாப்பாடு போட்டு, இந்த உலக்கையால் நன்கு அடித்து அனுப்புவார். அவருக்கு அப்படியொரு வேண்டுதல்’ என்றாள்.

அதைக் கேட்ட சாமியார் மெதுவாக நழுவி வீட்டை விட்டுப் போயிட்டார்.

அப்பொழுது அவள் வீட்டுக்காரன் வீட்டுக்கு வந்தான்.

சாமியாரைக் காணோம்.

பெண்டாட்டியைக் கூப்பிட்டு சாமியார் எங்கே என்று கேட்டான்.

‘சாமியார் இந்த உலக்கையை கேட்டார்.

உங்கள் அம்மா வைத்திருந்த உலக்கையாச்சே, நான் தரமுடியாது என்று சொன்னேன். அவர் கோவித்துக்கொண்டு இப்பொழுதான் போனார்’ என்று சொன்னாள்.

‘சாமியார் கேட்டால் கொடுக்க வேண்டியதுதானே! உலக்கயைக் கொடு’ என்று உலக்கையை கையில் எடுத்துக் கொண்டு சாமியாரை நோக்கி ஓடினான்.

அவன் உலக்கையோட வருவதைப் பார்த்த சாமியார், தன்னை அடிக்க வருவதாக நினைத்து ஓடினான்.

அவருக்கு எப்படியாவது உலக்கையை கொடுத்துவிட எண்ணி அவன் துரத்த, சாமியார் அவன் கண்ணில் படாமல் ஓடியேப் போய்விட்டார்.