Friday, 17 May 2024

கவலையின்மையே பலத்தைத் தரும்..''.

*கவலையின்மையே பலத்தைத் தரும்..''..* 
.......................................
       இந்த உலகத்தில் பலவற்றில் தோற்று போவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் பெரும்பாலான தோல்விக்கு காரணங்கள், மனக் கவலை,மன விரக்தி, மனச்சோர்வு போன்றவைதான்.

     அவசரப்பட்டு மனக் கவலையில் செய்யும் செயலில் இருந்து விலகி வெற்றி வாய்ப்பை இழப்பவர்கள் நிறைய பேர்.

      வாழ்க்கையில் எப்போதும் கவலை முகத்துடன் இருப்பவர்கள் , பொறுமை இழந்தவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. 

      அவர்களுடைய மனக்கவலையும் பொறுமை இன்மையும் அவர்களை படு குழியில் தள்ளிவிடும்.

கிருஷ்ணதேவராயர் சில யானைகள் முன்னால் வர, பின்னால் ஒரு யானையின் மீது அமர்ந்து வீதி உலாச் சென்றார். 

      ஒரு வீதியில் செல்லும்போது, எதிரில் வந்த இளைஞன் ஒருவன், முதலில் சென்ற யானையின் தந்தத்தைப் பிடித்துத் தள்ளினான். யானை சிறிது தூரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

      அரசர் தம் மந்திரியான அப்பாஜியிடம் “இந்த இளைஞன் எவ்வளவு பலசாலியாக இருக்கிறான்?” என்றார்.

      “அரசே! கவலையில்லாமல் வளர்ந்த பிள்ளை போலும்” என்று அப்பாஜி பதில் அளித்தான். 

       மறுநாளே அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தான். பின்பு அவனுடைய வீட்டைத் தேடிச் சென்றான்.

     இளைஞனின் அம்மாவிடம்,

      “அம்மா! ஒரே பிள்ளை என்று மிகுந்த செல்லம் கொடுக்கிறீர்கள். இப்படியே போனால் வளர்ந்த பிறகு பொறுப்பே இல்லாமல் இருப்பான்.

     இனிமேல் அவனுக்கு அளிக்கும் உணவில் உப்பே போடாதீர்கள். 

      ‘சம்பாதித்து வந்தால்தான் உப்பு போடுவேன்’ என்று சொன்னால்,        உங்கள் பிள்ளை பொறுப்பானவன்    ஆகி விடுவான்.” என்று அப்பாஜி கூறியதும் அவ்வாறே செய்யலானாள்.

        சில நாள்கள் சென்ற பின்பு, இராயர் முன்பு போலவே யானைப் படையுடன் நகர்வலம் சென்றார். 

      யானையைக் கண்டதும் அந்த இளைஞன் தந்தத்தைப் பிடித்துத் தள்ள முயன்றான். அவனால் முடிய வில்லை. 

     அதற்குள் யானை அவனைக் கீழே தள்ளிவிட்டது.

       “அரசே! பார்த்தீர்களா? சம்பாதிப்பது எப்படி என்று எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தான்  இளைஞன் அதனால் பலமிழந்தான். 

  கவலையின்மையே பலத்தைத் தரும் என்பது புரிகிறதா?” என்றார் அப்பாஜி. அரசரும் ‘நன்றாகப் புரிந்தது’ என்றார்.

      மனது சரியாக சிந்திக்க தொடங்கினால் மனக் கவலை, சோர்வு' பொறுமையின்மை ஏற்பட வாய்ப்பு இல்லை. 

     கவலையால் , உங்கள் உடல் நலன்கள் கெடுகின்றன. ஏன்? வாழ்வே துன்பமாகவும் தோல்வியாகவும் அமைந்து விடுகிறது..

     வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டுமானால் மனிதன் கவலையை ஒழித்தேயாக வேண்டும்.

Saturday, 11 May 2024

உங்களுக்குள் இருக்கும் சிகப்பு ஒநாயையும் நீல ஒநாயையும் கண்காணித்து கொண்டே இருங்கள்....!!!

ஒரு பிரியாணி விருந்தில் கலந்து கொள்கின்றோம்.

முதலில் அனைவருக்கும் சிக்கன் ப்ரை இரண்டு இரண்டு துண்டுகளை இலையில் வைக்கிறார்கள். 

உங்கள் இலைக்கு வரும் போது வைப்பவர் ஏதோ நினைவில் வேகமாக மிகச்சிறிய துண்டுகளை வைத்து போகிறார். 

”நீங்கள் தம்பி இன்னொன்னு வை” என்று சொல்லும் போதே அவர் அவசரத்தில் அந்த இடத்தை விட்டு விலகி வேறு வேலைக்கு போகிறார். 

அதன் பிறகு வரும் பிரியாணியை நீங்கள். 

1. சுவைத்து சாப்பிடுவீர்களா ?
2. சுவைக்காமல் சாப்பிடுவீர்களா ? 

சுவைத்து சாப்பிட்டால் நீங்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கையை அர்த்தமாக வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். 

உங்களுக்குள் இருக்கும் சிகப்பு ஒநாயை புறக்கணித்து நீல ஒநாய்க்கு தீனி போட்டு வளர்க்கிறீர்கள் என்று அர்த்தம்.

சுவைக்காமல் ஏதோ அவமானம் நடந்து விட்டது மாதிரி சாப்பிட்டால் நீங்கள் வாழ்க்கையை வீணடித்து மற்றவர்களையும் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்குள் இருக்கும் சிகப்பு ஒநாய்க்கு தீனி போட்டு எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஒருவருடைய மிக மோசமான செயலால் இன்னொருவர் பாதிக்கப்பட்டிருப்பார். 

பாதிக்கப்பட்டவர் என்னிடம் பேசும் போது “அவன் புத்திக்கெல்லாம் நல்லா நாசமா போவான் பாரு” என்று சாபமிடுவது மாதிரி பேசினால் ஒருமாதிரி ஆகிவிடுவேன்.

“ச்சே ஏன் அப்படி சொல்றீங்க. விடுங்க. அப்படி சொல்லாதீங்க” என்பேன். இப்படி சொல்லாமல் என்னால் இருக்கவே முடியாது. 

இது அமெரிக்க பழங்குடியின கதையின்படி

ஒவ்வொரு மனதிலும் இரண்டு ஒநாய்கள் இருக்கிறதாம். இரண்டுக்கும் சண்டை நடக்கும். எப்போதும் ஒரு மோதல் இருந்து கொண்டே இருக்குமாம். 

சிகப்பு ஒநாய் பொறாமை, கோபம். வெறுப்பு, ஆதிக்கம் என்று இருக்கிறது. 

நீல ஒநாயோ அன்பு, அருள், சகோதரத்துவம், மன்னித்தல் என்று இருக்கிறது. இந்த இரண்டு ஒநாய்களும் ஒன்றுக்கொன்று நம் மனதில் மோதிக் கொண்டே இருக்கின்றன.

இவை இரண்டில் எந்த ஒநாய் வெல்லும் ? நாம் எந்த ஒநாய்க்கு தீனி போடுகிறோமோ அதுவே வெல்லும். 

தப்பு சரி, நியாயம் அநியாயம் தாண்டி ஏதோ ஒருவிதத்தில் அதிக வெறுப்பு, பொறாமை, எரிச்சல் கொண்டிருக்கும் போது நாமும் அந்த சிகப்பு ஒநாயாகவே மாறிவிடுவோம். 

அப்படி மாறும் போது வாழ்க்கையில் நிம்மதியே இல்லாமல் போய்விடும். 

ஒன்றுமில்லை ஒரு விழாவுக்கு போகும் போது உங்கள் மனநிலையை கவனித்துப் பாருங்கள். 

நீங்கள் சிகப்பு ஒநாய்க்கு தீனி போடுகிறீர்களா? 
அல்லது நீல ஒநாய்க்கு தீனி போடுகிறீர்களா? என்பதை கண்டுகொள்ள முடியும்.

- என்னை கண்டுகொள்ளவில்லை

- சாப்பாடு நல்லாயில்லை

- ரொம்பத்தான் ஒவரா ஸீன் போடுறாங்க

- நான் விழா எடுக்கும் போது இத விட நல்லா செய்து காட்டுறேன் பாரு.

- நீயா வந்து பேசினா நா பேசுவேன். இல்லன்னா பேச மாட்டேன்.

இப்படி எல்லாம் சிகப்பு ஒநாய்க்கு தீனி போடுபவர்களும் உண்டு.

- எல்லாரும் எவ்ளோ மகிழ்ச்சியா இருக்கங்க ( ரசனை)

- சாப்பாடு அருமை

- விழா கொண்டாட்டம் அருமை

- நாம விழா எடுக்கும் போதும் இப்படி எல்லாரையும் ஹேப்பியா வைச்சிக்கனும்

- அவுங்க தெரியாம இருக்காங்க போல இருக்கு. நாம போய் பேசுவோம்.

இப்படி எல்லாம் நீல நிற ஒநாய்க்கு தீனி போடுபவர்களும் உண்டு.

சிகப்பு ஒநாய்க்கு தீனி போடுபவர்களுக்கு எவ்வளவு புகழ், பணம், பதவி வந்தாலும் வாழ்க்கை துன்பமாகவே இருக்கும்.

நீல நிற ஒநாய்க்கு தீனி போடுபவர்கள் எந்த சூழலிலும் மகிழ்ச்சியாக மன நிம்மதியாக இருப்பார்கள்.

வீட்டில் வளரும் சிறார்களிடம் இந்த இரண்டு ஒநாய்கள் பற்றியும் அடிக்கடி பேசிக் கொண்டிருங்கள்.

ஒருவேளை மாற்றங்கள் நிகழலாம். அவர்கள் மன ஆரோக்கியத்தோடு வளர வாய்ப்பு அதிகமுண்டு.

உங்களுக்குள் இருக்கும் சிகப்பு ஒநாயையும் நீல ஒநாயையும் கண்காணித்து கொண்டே இருங்கள்....!!!