Saturday, 21 June 2025

"யார் தான் இவன்?" (சிறுகதை)

 "யார் தான் இவன்?"

(சிறுகதை)

“ஏங்க! நான் பேசுறது உங்க காதில் விழலையா? ஐ

யா சாமி! ஊர் உலகத்துல என்ன நடக்குதுன்னு தெரியாம எப்ப பாரு அந்த போனை நோண்டிக்கிட்டே இருக்கீங்க? பொறுப்பான அப்பாவா எப்ப மாறுவீங்க?”என ஆகாயத்திற்கும் பூமிக்குமாக குதித்தாள் அகிலா.


 50 வயதை தொட்ட பரமேஸ்வரனுக்கு அவனது மனைவியின் குரல் அண்டாவிற்குள் மாட்டிக் கொண்ட எலி கீச்சிடுவதை போல் கேட்டது..  

செல்போனுக்குள் தலையை நுழைத்திருந்த பரமு

சட்டென தலை நிமிர்ந்தார்..


அடியே அகிலா! அவசரப்படாதடி! நான் எப்படி போயி  எதிர் வீட்டுல பேசுறதுனு எனக்கு  ஒண்ணுமே புரியல! நீ ஈஸியா சொல்லிட்ட..ஆனா எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு.”


 "ஆமாங்க! எனக்கும் அசிங்கமா தான் இருக்கு.. ரெண்டு மாசமா புதுசா குடி வந்திருக்கானே அந்த எதிர்வீட்டு பையன்… யாருங்க அவன்? அரை கால் டிரவுசர் ஒன்னை மாட்டிக்கிட்டு,  ஊரை ஏமாத்த,படிப்பதை போலவே கையில ஒரு புத்தகத்தையும் வச்சுக்கிட்டு.. அவுங்க வீட்டு நிலை வாசல்ல உட்கார்ந்து கிடக்கிறதை பார்க்கிறப்ப ரொம்பவுமே அசிங்கமா தான் இருக்கு. "என்றாள்


அது சரி! நீ ஏண்டி அந்த பயல பாக்குற?சின்ன பயலை போய் சைட் அடிக்கிறியா?” என்று கிண்டல் அடித்து சிரித்தார் பரமேஸ்வரன்..


"எப்பவுமே  பாருங்க! எதுவும் புரியாத மாதிரியே பேசுறது ! வயசுக்கு வந்த உங்க பொண்ணு யாழினி வீட்டில் இருக்காங்கறது உங்களுக்கு மறந்து போயிடுச்சா? யாரு இவன்?அந்த பயலை இனிமேல் வெளியில வந்து உட்கார கூடாதுன்னு  கண்டிச்சு சொல்லிட்டு வாங்க.. போங்க!" என்று

மனைவி போடும் சத்தம் எங்கே அவர்கள் வீட்டுக்கே கேட்டு விடப் போகிறதோ என பயந்து பரமேஸ்வரன் எதிர் வீட்டை நோக்கி கிளம்பினார்.

 நல்ல வேளை அந்த பையன் வாசலில் உட்கார்ந்திருக்கவில்லை..


 எதிர் வீட்டிற்குள் நுழைந்த பரமேஸ்வரனுக்கு

 அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது

 அங்கே உடல் நலம் சரியில்லாத தந்தை!

 மனநலம் சரியில்லாத அன்னை!


"வாங்க அங்கிள்! உங்களை நான் இங்கே எதிர்பார்க்கல"  என்று பரபரப்புடன் வரவேற்றான் அந்தப் பையன் மணிமாறன். அவனது முகத்தில் தோன்றிய மகிழ்ச்சிக்கு தான் அருகதையற்றவன் என்பது போல் தோன்றியது பரமேஸ்வரனுக்கு.


அவசரமாய் அடுப்படிக்குள் நுழைந்த மணிமாறன் கையில் மூன்று டீ கோப்பைகளை தட்டில் ஏந்தியவாறு வெளியில் வந்தான்..


இப்பதான் எங்களுக்காக டீ போட்டேன். ஆறி போவதற்குள் டீயை குடித்து விடுங்கள்”. என்று சொல்லிக் கொண்டே ஒரு தேநீர் கோப்பையை பரமேஸ்வரனின் கையில் கொடுத்துவிட்டு,படுக்கையில் கிடந்த தகப்பனை அலாக்காக தூக்கி உட்கார வைத்து,மற்றொரு கோப்பையை அவரது கையில் கொடுத்தான்.. 


அடுத்து அன்னைக்கு செய்ய வேண்டிய கடமை தவறாது அடுத்த தேநீர் கோப்பையை அவளது வாயில் வைக்கவும், மனநலமில்லாத அந்த தாயோ அவனை அடித்து , கொதிக்கும் டீயை அவன் மேல் கொட்டி, மகன் துடிப்பதை கண்டு சத்தம் போட்டு சிரித்தாள்.


எதிரே அமர்ந்திருந்த  மாறனின் தந்தையோ பரமேஸ்வரனை பார்த்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்..

"பாருங்க சார்! இதுதான் என் பாவப்பட்ட பையனுடைய வாழ்க்கை ! "


இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த பைக் ஆக்சிடெண்ட்ல எனக்கு கால் போயிடுச்சு.. என் மனைவிக்கு தலையில் அடிபட்டதால் மூளை பாதிக்கப்பட்டு விட்டது.. அன்றைய ஒரு தினம் நல்லா போய்க்கிட்டு இருந்த எங்கள் வாழ்க்கையை திருப்பி போட்டு விட்டது .. அன்றிலிருந்து இவன்தான் எங்களுக்கு தாயுமானவன் ,

எங்கள் தந்தையாக வாழ்பவன்.. 


எங்களால் அவனது பள்ளிப் படிப்பு ஒன்பதாம் வகுப்புடன் முடிந்து விட்டது... இதோ வீட்டில் இருந்தபடியே படித்து வருகிறான்... அவனது இந்த அம்மாவை வைத்துக் கொண்டு இங்கே எப்படி படிப்பது? தெருவில் உட்கார்ந்து படிக்க சொல்லி நான் தான் அனுப்பிவிடுவேன்.. அப்படி உட்காரும்போது உங்களுடைய மகளை பார்த்துவிட்டு வந்து என்ன சொன்னான் தெரியுமா?...


'நீ ஏம்பா என்னை ஒத்த பிள்ளையா பெத்தீங்க ?

எதிர்வீட்டு பெண்ணை போல ஒரு தங்கச்சி  இருந்திருந்தால் இந்த மாதிரி நேரத்துல எனக்கு எவ்வளவு ஒத்தாசையாக இருந்திருக்கும்'.. என்று சொல்றானுங்க. அவன் எங்களால் மிகவும் சிரமப்படுகிறான்.. ஆனால் வெளியில் காட்டிக் கொள்வதில்லை ..


அவன் எங்கள் இருவரையும் குளிக்க வச்சு, எங்களது கழிவுகளை சுத்தம் செய்து.." அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைக்க அந்த பெரியவர் மீண்டும்  ஓவென்று சத்தம் போட்டு அழ ஆரம்பித்தார்.

  

"அழாதீங்க சார் ! உங்களுக்கு எந்த உதவி என்றாலும் என்னை ஒரு சகோதரனாக நினைத்துக் கொண்டு கேளுங்க ! “ எனச் சொல்லி கண்கள் கலங்கியபடி அங்கிருந்து விடைபெற்றார் பரமேஸ்வரன்.


உள்ளே மணிமாறன் தன் தாய் தந்தைக்காக சமைத்துக் கொண்டிருக்கும் வாசம் மூக்கை வருடிச் சென்றது.. யார் இவன்? ஆம்..தாயுமானவன் ...

ஓர் தந்தையாக வாழ்பவன்


மனபாரத்துடன் அந்த வீட்டை விட்டு வெளியில் வந்த பரமேஸ்வரன் ஏனோ அதன் நிலை வாசலை மிதிக்காமல் தாண்டினார் .. அது நிலைவாசல் அல்ல ..கோவிலின் நுழைவாசல் ..அந்த வீட்டில்.. இல்லையில்லை.., அந்த கோவிலில்.. மணிமாறன் உருவில் ஒரு தெய்வம் நடமாடிக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment